குட் நியூஸ்..!! வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு..!!
குட் நியூஸ்..!! வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

கடந்த மே மாதம் 7, 19 ஆகிய தேதிகளில் எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி நிர்ணயித்தது. அதன்படி, சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,018.50-க்கும், வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 2,507-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேநேரத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.134 குறைந்து ரூ.2373-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 187 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 2,186-க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. அதேவேளை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் சிலிண்டர் ஒன்று ரூ. 1018.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

