பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனோ பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது 2021 - 2022 கல்வி ஆண்டுக்கான மிதிவண்டிகள் வழங்குவதற்கு அரசு ஆயத்தமாகி வருகிறது.இந்நிலையில், 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.07.2022) சென்னை, நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி சு. அமிர்த ஜோதி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.