அரசு பெண் அலுவலரை சரமாரியாக வெட்டிய அரசு ஊழியர்!! காரணம் முன்விரோதமா?
அரசு பெண் அலுவலரை சரமாரியாக வெட்டிய அரசு ஊழியர்!! காரணம் முன்விரோதமா?

தேனி மாவட்ட ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மாவட்ட திட்ட அலுவலராக பணியாற்றி வருபவர், ராஜராஜேஸ்வரி (வயது 52). இன்று அலுவகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது இதே அலுவலகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு இளநிலை உதவியாளராக பணியாற்றிய போடியைச் சேர்ந்த உமாசங்கர் என்பவர், ராஜராஜேஸ்வரியை சந்திக்க அவரது அறைக்குள் சென்றார்.

அப்போது ராஜராஜேஸ்வரியிடம் பேசிக்கொண்டிருந்த உமாசங்கர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜராஜேஸ்வரியை கை, தலை, முகம் ஆகிய இடங்களில் சரமாரியாக அடுத்தடுத்து வெட்டினார். ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜராஜேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அறைக்கு வந்த ஊழியர்கள் உமாசங்கரை வளைத்து பிடித்து அங்கிருந்த அறையில் வைத்து பூட்டினர்.
உடனடியாக ராஜராஜேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த உமாசங்கரை கைது செய்து அழைத்துச்சென்றனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், 2015-ம் ஆண்டு பணியாற்றிய போது ஆவணங்களை முறையாக பராமரிக்காததால் உமா சங்கரை சஸ்பெண்ட் மற்றும் சார்ஜ் சீட் பதிவு செய்ததாகவும், மேலும் அவரை திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் போனதால் ஆத்திரத்தில் ராஜராஜேஸ்வரியை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ராஜராஜேஸ்வரியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமூக நலத்துறை அலுவலகத்தில் பெண் திட்ட அலுவலர் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

