ஆளுநருக்கு பாதிப்பு இல்லை.. கறுப்புக் கொடி விவகாரத்தில் முதல்வர் விளக்கம்..!
ஆளுநருக்கு பாதிப்பு இல்லை.. கறுப்புக் கொடி விவகாரத்தில் முதல்வர் விளக்கம்..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று (20-ம் தேதி) வீட்டுவசதி மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்ட அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள், ‘தருமபுரம் 27 வது ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று மயிலாடுதுறை சென்ற தமிழக ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழக ஆளுநர் சென்ற வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போது வாக்குவாதம் செய்து, பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்படியிருந்த கறுப்புக் கொடிகளை வீசி எறிந்துள்ளனர் என்பதுதான் உண்மை.
இதனால் ஆளுநருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆளுநருக்கு எதிரான போராட்டம் குறித்து சட்டம், ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் சேர்ந்துதான் அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால், இந்த அறிக்கை மட்டும் தனித்தனியாக வந்தது. அப்பவே புரிந்துகொள்ளலாம்.
எனவே, ஆளுநர் விவகாரத்தில் நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறி எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

