முன்னாள் அமைச்சரின் மனைவி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்..!!
முன்னாள் அமைச்சரின் மனைவி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்..!!

‘முன்னாள் அமைச்சரின் மனைவி, எந்த அனுமதியும் பெறாமல் கட்டிடத்தின் பழைய தேக்குமர தெராய்களை அகற்றி மேற்கூரையை மாற்றி உள்ளார். உள்ளே, கழிவறைகள் அமைத்துள்ளார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி வர்த்தக சபை தலைவர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள், ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், ‘புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள வர்த்தக சபைக்கு சொந்தமான குடோனில் முன்னாள் அமைச்சர் ஷாஜகான் மனைவி வஹீதா கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் நடத்தி வந்தார்.
அந்த இடத்தில், தொழில் மற்றும் வணிக மேம்பாட்டுக்காக வர்த்தக மையம் அமைக்க நகரமைப்பு குழுமத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள வாடகைதாரர்களை காலிசெய்ய நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ளோம்.
இந்நிலையில், வர்த்தக சபைக்கு எந்தவித தகவலும் தராமல் ஒரு தனியார் நிறுவனத்துக்கு இந்த குடோனை வஹீதா வாடகைக்கு விட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி பாரம்பரிய கலைநயம் கொண்ட கட்டிடத்தை பாதுகாத்திடும் எந்த அமைப்பிடமும் (நகரமைப்பு குழுமம், இன்டாக்) அனுமதி பெறாமல், வர்த்தக சபையிடமும் எந்த அனுமதியும் பெறாமல் கட்டிடத்தின் பழைய தேக்குமர தெராய்களை அகற்றி மேற்கூரையை மாற்றி உள்ளார். உள்ளே, கழிவறைகள் அமைத்துள்ளார்.
இது, சட்டத்திற்கு புறம்பானதும் வர்த்தக சபையுடனான ஒப்பந்தத்துக்கு விரோதமானதும் ஆகும். இந்த புகார் மனு மீது விசாரித்து வஹீதா மீது தக்க கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

