Theme Check

இதுக்கு தான் சிறைக்கு திரும்பல.. பரோலில் சென்ற கைதி வாட்ஸ்அப்பில் பரபரப்பு தகவல்..!

இதுக்கு தான் சிறைக்கு திரும்பல.. பரோலில் சென்ற கைதி வாட்ஸ்அப்பில் பரபரப்பு தகவல்..!

இதுக்கு தான் சிறைக்கு திரும்பல.. பரோலில் சென்ற கைதி வாட்ஸ்அப்பில் பரபரப்பு தகவல்..!
X

சேலம் மத்திய சிறையில் இருந்து பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதி ஹரி, மீண்டும் சிறைக்கு திரும்பாதது ஏன்? என்பது குறித்து சிறை அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்பில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஹரி (44). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி அவருக்கு மூன்று நாள் பரோல் கிடைத்தது.

பரோல் விடுப்பு முடிந்து, ஜூன் 25-ம் தேதி மாலை 6 மணிக்கு அவர் சிறைக்கு திரும்ப வேண்டும். ஆனால், அன்று மாலை 5.30 மணியளவில் சிறை நிர்வாகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஹரி, இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், 6 மணிக்கு மேலாகியும் ஹரி சிறைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறைக் காவலர்கள், ஹரி பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அந்த எண் வாடகை கார் ஓட்டுநர் ஒருவருடையது என்பது தெரிய வந்தது. கார் ஓட்டுநரோ, ஹரியை சிறை வாசலில் இறக்கி விட்டுச் சென்றதாக கூறினார்.

இதையடுத்து, சிறை வாசல் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிறைக்கு வந்த ஹரியை, வார்டன் ராமகிருஷ்ணன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

மத்திய சிறை எஸ்பி கிருஷ்ணகுமார், டிஎஸ்பி மதிவாணன் ஆகியோர் வார்டன் ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, “ஆயுள் கைதி ஹரி, பழங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்.

அதனால், அவரை அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றேன். அங்கிருந்து ஹரி தப்பிச் சென்று விட்டார்” என அவர் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறைத்துறை அதிகாரிகள், பணி நேரத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக வார்டன் ராமகிருஷ்ணனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். அத்துடன், தலைமறைவான ஹரியை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், தலைமறைவான கைதி ஹரி, உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்பில் குரல் பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “பல ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து விட்டேன். ஆனால், விடுதலைக்கான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை.

சிறைக்கு வந்து 30 முறைக்கும் மேலாக பரோலில் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் வெளியே போகும்போதும், திரும்பி வரும்போதும் அதிகாரிகளால் பெரும் துன்பத்தை அனுபவித்து விட்டேன்.

இதனால், வேறு வழியில்லாமல் வெளியே போகிறேன். இதற்காக எனது மனைவி, குழந்தைகளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘பரோலில் செல்ல அதிகாரிகள் பணம் கேட்ட விவரத்தை தான் அவர் சொல்லியுள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Next Story
Share it