தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கோடை மழை கொட்டித்தீர்த்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களி 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது, லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (ஏப். 15) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப். 16, 17: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப். 18: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 18-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூா், திருத்துறைப்பூண்டியில் தலா 100 மி.மீ., நீலகிரி மாவட்டம் ஜி பஜாரில் 90 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 70 மி.மீ., தேனி மாவட்டம் வீரபாண்டி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 60 மி.மீ., விருதுநகா், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருப்பூா் மாவட்டம் அமராவதி, சேலம் மாவட்டம் மேட்டூா், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
newstm.in

