Theme Check

ஜிப்மரில் இந்தி திணிப்பு? - புது விளக்கம் கொடுத்த துணைநிலை ஆளுநர் !!

ஜிப்மரில் இந்தி திணிப்பு? - புது விளக்கம் கொடுத்த துணைநிலை ஆளுநர் !!

ஜிப்மரில் இந்தி திணிப்பு? - புது விளக்கம் கொடுத்த துணைநிலை ஆளுநர் !!
X

புதுச்சேரியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் சென்று சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இனி வரும் காலங்களில் அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் பிறப்பித்துள்ளார்.

அதாவது, அனைத்து ஆவணங்களும், கணக்குகளும் இனி இந்தியில் தான் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஜிப்மர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் ஜிப்மர் இக்குநருடன் சுற்றறிக்கை தொடர்பாக சுமார் 15 நிமிடம் ஆலோசனை நடத்தினார்.

pudhucherry

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, ஜிப்மரில் அலுவல் ரீதியாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதை தவறாக புரிந்துள்ளனர். இங்கு மொழித்திணிப்பு இல்லை. நிர்வாக ரீதியாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை மட்டுமே. தேவைப்பட்டால் இந்தியை பயன்படுத்தலாம் என்று தான் உள்ளது. இது நான்காவது சுற்றறிக்கை.

முதல் சுற்றறிக்கையில் ஆங்கிலம், தமிழ் இருக்க வேண்டும் என உள்ளது. அதே தேதியிட்ட சுற்றறிக்கையில் தமிழ் இருக்க வேண்டும் என உள்ளது. மேலும் நோயாளிகள் பதிவு செய்வது, அவர்களை தொடர்பு கொள்வது போன்றவற்றிற்கு தமிழ் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தி தெரிந்தவர்கள் அதிகம் உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்காக தேவைப்பட்டால் இந்தி பயன்படுத்தலாம் என்றுதான் உள்ளது. இங்கு தமிழ் பிரதானப்படுத்தப்படுகிறது. தமிழில் சேவை உள்ளது. இந்தி திணிப்பு இங்கு இல்லை. இதை அரசியல்படுத்த வேண்டாம். ஜிப்மர் மருத்துவமனையில் உள்சுற்றறிக்கையை வெளியில் கொண்டு வந்து அதை மிகைப்படுத்துவது தவறு என்றும், அரசியல் கட்சியினரின் இந்த போராட்டம் தேவையற்றது. நோயளிகளுக்கு இடையூறு இல்லாமல் சேவை செய்ய வழிவிடுங்கள். ஜிப்மரில் தமிழ் முதன்மைபடுத்தப்படுகிறது, என்று கூறினார்.

pudhucherry

முன்னதாக புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட திமுகவினர், ஜிப்மர் மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய திமுக தொண்டர்கள் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதேபோல், மதிமுக துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மணி தலைமையில் 100க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தி திணிப்பு சுற்றறிக்கை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என தெரிவித்தனர்.


newstm.in

Next Story
Share it