ஹோலி கொண்டாட்டம்.. வண்ணப் பொடிகளை பூச தடை..!
ஹோலி கொண்டாட்டம்.. வண்ணப் பொடிகளை பூச தடை..!

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஆண்கள், பெண்கள், சிறுவர் - சிறுமியர், முதியவர்கள் என ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், பூசியும் கொண்டாடுவது வழக்கம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒவ்வொரு வகையாக ஹோலி கொண்டாடப்படுகிறது. விலங்குகள் மீது வண்ணப் பொடிகளை தூவியும் சிலர் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதுண்டு.
இதுகுறித்து கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள விலங்குகள் மற்றும் கால்நடை துறையின் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‘ரசாயன அல்லது இயற்கை வண்ணப் பொடிகள் விலங்குகளின் தோல், வாய், கண் அல்லது மூக்கு வழியாக அவற்றின் உடலுக்குள் செல்ல முடியும். இதனால் ஒவ்வாமை, வாந்தி மற்றும் பார்வை இழப்பு ஆகியவையும் ஏற்படக்கூடும்.

விலங்குகளின் சுகாதாரத்திற்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய இதுபோன்ற வண்ணங்களை பூசாமல் தடுக்கும்படி பொதுமக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். தவிர, விலங்குகள் கொடுமை சட்டம் 1960-ன் படி இது சட்டவிரோதம் ஆகும்.
விலங்குகளின் மீது வண்ணப் பொடிகளை பூசுவது, தூவுவது போன்ற சம்பவங்கள் நடப்பது அறியப்பட்டால், இந்த சட்டத்தின் விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

