உடனடியாக வீட்டு குடிநீர் இணைப்பு.. சபாநாயகர் அப்பாவு தகவல்..!
உடனடியாக வீட்டு குடிநீர் இணைப்பு.. சபாநாயகர் அப்பாவு தகவல்..!

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் உதவி செயற் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் அலுவலகம் கட்ட ரூ. 62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, தரை தளத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகமும், மேல் மாடியில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் கட்டப்பட்டது.
புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. விழாவிற்கு மின்வாரிய தலைமை பொறியாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். மேற்பார்வை பொறியாளர் ராஜன் ராஜ் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ் மணி வரவேற்று திட்ட விளக்க உரையாற்றினார்.
விழாவில் புதிய கட்டடத்தை தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, “மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தவர் மறைந்த தலைவர் கருணாநிதிதான் என்பதை மறக்க முடியாது.
அந்த வழியில், தற்போதைய திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஓராண்டு காலத்திற்குள் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு வழங்கியவர் முதல்வர் ஸ்டாலின்.
மின்வாரிய பணி என்பது மிகவும் கடினமான பணியாகும். அத்தகையை பணிகளை செய்து வரும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விவசாயிகளை மதிக்க வேண்டும்.
உற்பத்தி செய்து நம்மை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் விவசாயிகள் தான். உண்மையிலேயே நாம் வணங்குகின்ற முதல் கடவுள் ஆண்டவனுக்கு அடுத்தபடியாக விவசாயியை தான் நாம் வணங்க வேண்டும். விவசாயி இல்லை என்றால் நமக்கு எதுவும் இல்லை.
இந்த ஆட்சி பொறுப்பேற்றவுடன் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து திருக்குறுங்குடி, ஏர்வாடி, வள்ளியூர், பணகுடி மற்றும் திசையன்விளை நகர பஞ்சாயத்து பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 271 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
அப்போது குடிநீர் இணைப்பு கேட்கிறவர்கள் அனைவருக்கும் வீட்டு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

