போலீஸ் பாதுகாப்போடு வந்து பரீட்சை எழுதினேன்.. மாநிலக் கல்லூரியில் மனம் திறந்த முதல்வர்..!
போலீஸ் பாதுகாப்போடு வந்து பரீட்சை எழுதினேன்.. மாநிலக் கல்லூரியில் மனம் திறந்த முதல்வர்..!

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது; “நான் படித்த கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கையில் பட்டங்களோடு, மனதில் கனவுகளோடு இருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக மட்டும் வாழ்த்தவில்லை. கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையிலும் வாழ்த்துகிறேன்.
அரசியலில் ஆர்வம் இருந்ததால் முழுமையாக என்னை நான் கல்வியில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிக்காக தேர்தல் பிரச்சார நாடகங்களை ஊர் ஊராகச் சென்று நடத்தினேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே எனக்கு அரசியல் மீது ஆர்வம் வந்தது.
இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்ட போது, திமுகவினர் 500-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். மிசா சட்டத்தில் கைதான போது போலீஸ் பாதுகாப்போடு மாநிலக் கல்லூரிக்கு வந்து பரீட்சை எழுதினேன்.
கல்வியை கட்டாய கடமையாக வலியுறுத்தி ஒரு இயக்கமாக தொடங்கி இருக்கிறேன். யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து கல்வி தான். படிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பு என்பது மிகப்பெரிய வாய்ப்பு.
சென்னை மாகாணத்தின் முதல் கல்லூரி இந்த மாநிலக் கல்லூரி. சென்னை பல்கலைக் கழகத்தின் தாய் நிறுவனம் மாநிலக் கல்லூரி. படித்து, வளர்ந்து, முன்னேறி, அனைவருக்கும் எடுத்துக் காட்டாக திகழ வேண்டும்.
முதல் தலைமுறை பட்டதாரிகள், விளிம்பு நிலை, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் அதிகம் படிக்கும் கல்லூரி மாநிலக் கல்லூரி. மாநிலக் கல்லூரியில் 2,000 பேர் அமரும் வகையில் கலைஞர் பெயரில் மாபெரும் அரங்கம் அமைக்கப்படும்.
தயாநிதி மாறனும், உதயநிதி ஸ்டாலினும் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே தங்கும் விடுதி அமைக்கப்படும்” எனக் கூறினார்.

