நான் ஓடி ஒளியவில்லை.. லொகேஷனை ரஷ்யாவுக்கு ஷேர் செய்த உக்ரைன் அதிபர்
நான் ஓடி ஒளியவில்லை.. லொகேஷனை ரஷ்யாவுக்கு ஷேர் செய்த உக்ரைன் அதிபர்

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 13ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்ய படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷ்ய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அவ்வப்போது வீடியோ வெளியிட்டு போரை நிறுத்தும்படி உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறார். அதேவேளை ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக ரஷ்ய தரப்பில் பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தலைநகர் கீவ்-வில் உள்ள அதிபர் மாளிகையில் இருந்தபடி ஜெலன்ஸ்கி அந்த வீடியோவை எடுத்துள்ளார்.
வீடியோவில் பேசிய ஜெலன்ஸ்கி, நான் தலைநகர் கீவ்-வில் உள்ள பென்கோவா பகுதியில் தான் இருக்கிறேன். நான் ஒளிந்துகொள்ளவில்லை. யாருக்கும் பயப்படவும் இல்லை. புதினை எதிர்கொள்ள எவ்வளவு நாள் தேவைப்படுகிறதோ அவ்வளவு நாள் நான் தலைநகர் கீவ்வில் தான் இருக்கப்போகிறேன்.
திங்கட்கிழமை கடினமான நாள் என்று நாங்கள் கூறுவது உங்களுக்குத் தெரியும். நாட்டில் போர் நடைபெறுகிறது, எனவே ஒவ்வொரு நாளும் திங்கட்கிழமைதான், என்று அவர் கூறினார்.
மேலும், ஜெலன்ஸ்கி கீவில் உள்ள தனது இருப்பிடத்தை இன்ஸ்டாகிராம் லொகேஷன் மூலமாக தெரிவித்தார்.
newstm.in