ஜாதியால் அடையாளம் காண மாட்டேன்.. முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி..!
ஜாதியால் அடையாளம் காண மாட்டேன்.. முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி..!

“அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும்” என்று, தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமத்துவ நாள்’ ஆக கடைப்பிடித்து உறுதிமொழி ஏற்கவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் படத்திற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், “சக மனிதர்களை ஜாதியின் பெயரில் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன்; மாறாக, அவர்களிடம் சமத்துவத்தை கடைப்பிடிப்பேன்” என்று உறுதிமொழி ஏற்றார்.

