IPL: தோல்வியில் இருந்து மீளுமா சிஎஸ்கே... இன்று பஞ்சாப் அணியுடன் மோதல் !!
IPL: தோல்வியில் இருந்து மீளுமா சிஎஸ்கே... இன்று பஞ்சாப் அணியுடன் மோதல் !!

ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று தனது மூன்றாவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் 7 வது இடத்திலும், சென்னை 8 வது இடத்திலும் உள்ளன.
சிறிய மைதானமான பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இப்போட்டி இன்று நடக்க உள்ளது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமற்ற இந்த களம், இன்னிங்ஸின் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுக்கலாம். இதனால் இன்று டாஸ் வெற்றிபெறும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டு தொடக்க ஆட்டங்களிலும் தோல்விகளைச் சந்தித்துள்ளது. சூப்பர் கிங்ஸ் கேப்டன்சியில் மாற்றம் கை கொடுக்கவில்லை என்ற கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளது. சமீபத்திய போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்க்கு எதிராக போட்டியில் 210 ரன்கள் குவித்தும் சென்னை தோல்வியை சந்தித்தது.
குறிப்பாக, பந்துவீச்சில் சென்னை அணி அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பந்துவீச்சில் டுவைன் பிராவோ மற்றும் பிரிட்டோரியஸ் ஆகிய இருவர் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.
பஞ்சாப் அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் பட்டம் வெல்லவில்லை என்ற வேட்கையில் இந்தாண்டு விளையாடி வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் உறுதியாக வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு பேட்டிங் ஒரு பிரச்சனை இல்லை என்றாலும், அவர்களின் பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை. பந்து வீச்சாளர்கள் சரியான நேரத்தில் பவுண்டரிகளை விட்டு விடுகிறார்கள் மற்றும் டெத் ஓவர்களில் அவர்கள் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்துகிறார்கள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் மயங்க் அகர்வால் அணி பேட்டிங்கில் சரிவை சந்தித்து 137 ரன்களுக்கு சுருண்டது. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடுவர் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 25 போட்டிகளில் மோதியுள்ளன. இந்த 25 ஆட்டங்களில் சென்னை அணி 15ல் வெற்றி பெற்றுள்ளது, பஞ்சாப் அணி 10 முறை வெற்றி பெற்றுள்ளது.
newstm.in

