மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஐ.டி ஊழியர் தற்கொலை!!
மனைவி, 2 குழந்தைகளை கொன்று ஐ.டி ஊழியர் தற்கொலை!!

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் – காயத்ரி தம்பதிக்கு நித்தியஸ்ரீ, ஹரிகிருஷ்ணன் ஆகிய இரண்டு குழந்தைகள். இந்நிலையில், பிரகாஷ் மரம் அறுக்கும் மெஷினால் மனைவி மற்றும் குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் அதே மெஷினால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் நான்கு பேரின் உடலை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பிரகாஷ் சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல ஐ.டி கம்பெனியில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்ததும், அவரது மனைவி காயத்ரி வீட்டின் அருகே நாட்டு மருந்து கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.

பிரகாஷின் மனைவி பா.ஜ.க.,வின் மண்டல செயலாளராக இருந்து வந்துள்ளார். கணவன் மனைவிக்கு அதேப்பகுதியில் சொந்தமாக வீடு இருக்கும் நிலையில், காயத்ரி கட்சிப்பணிகளை கவனிப்பதற்காக வாடகை வீட்டில் குடியேறினர்.
கட்சிப் பணிகளுக்காக காயத்ரி அதிக அளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்க, பணம் கொடுக்க முடியாமல் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை எழுந்துள்ளது. இதுவே கொலை மற்றும் தற்கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

வீட்டு சுவற்றில் எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதி வைத்திருந்தையும் ரூ.3.5 லட்சத்துக்கான கடன் பத்திரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் யார், கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு பிரகாஷை தூண்டியது யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

