சொத்து வரி செலுத்தினால் சினிமா பார்க்கலாம்.. சென்னை மாநகராட்சி அசத்தல்..!
சொத்து வரி செலுத்தினால் சினிமா பார்க்கலாம்.. சென்னை மாநகராட்சி அசத்தல்..!

ஆன்லைன் மூலம் சொத்து வரி செலுத்தி, வங்கி நிபந்தனைகளுக்கு உட்பட்டு கேஷ்பேக், வவுச்சர், சினிமா டிக்கெட் போன்ற சலுகைகளை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி துவங்கியுள்ளது. அதன்படி, சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 27-ம் தேதி வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு பொது சீராய்வு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய சொத்துவரியை எளிதாக செலுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதன் படி, வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி என்ற பெயரில் காசோலைகள் மற்றும் வரைவோலைகள் மூலம் செலுத்தலாம். வரி வசூலிப்பவர்களிடம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம்.
www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலம் எவ்வித பரிமாற்ற கட்டணமும் இல்லாமல் செலுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலம் நேரடியாக பணமாகவும் செலுத்தலாம்.
‘நம்ம சென்னை’ மற்றும் ‘பே.டி.எம்’ போன்ற செல்போன் செயலி மூலம் செலுத்தலாம். BBPS (Bharat Bill Payment System) மூலமாகவும் செலுத்தலாம். அரசு இ-சேவை மையங்களிலும் செலுத்தலாம்.
சொத்து வரியை இணையதளம் மூலம் செலுத்தினால், குறிப்பிட்ட வங்கிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கேஷ்பேக், வவுச்சர், சினிமா டிக்கெட் போன்ற சலுகைகள் வழங்க இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

