பாஜகவை பலப்படுத்த நினைத்தால்.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!
பாஜகவை பலப்படுத்த நினைத்தால்.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று (12-ம் தேதி) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதன் கேள்வி நேரத்தின்போது, சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் பிரச்னை குறித்து பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது. இன்று அதில் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

நம்முடைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மிக விளக்கமாக என்ன சொல்ல வேண்டுமோ, அவை அனைத்தையும் பதிலாக இங்கே தந்திருக்கிறார். எனவே, நான் அதற்குள் அதிகம் செல்ல விரும்பவில்லை.
இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த உறுப்பினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். அது என்னவென்று கேட்டால், ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளில் நீங்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள்.
இதுதான் என்னுடைய வேண்டுகோள். சாமானிய மக்களைப் பாதிக்கும் வகையில், இன்றைக்கு பெட்ரோல் விலை, டீசல் விலை, அதேபோன்று, கேஸ் சிலிண்டர் விலை, இவையெல்லாம் உயர்ந்து கொண்டே போகிறது. அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் நீங்கள் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், நம்முடைய மாநிலத்திற்கு வரவேண்டிய நிதியைப் பற்றி விளக்கமாக, விரிவாக சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களிடத்திலே, குறிப்பாக, இந்திய பிரதமரிடத்திலே நான் வலியுறுத்தி விட்டு வந்திருக்கிறேன்.
எனவே, அதற்கு நீங்கள் ஆதரவாக இருந்து, அதைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். நம்முடைய மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதைப் புரிந்து கொண்டு நீங்கள் நடக்க வேண்டும்.
எனவே, தேவையில்லாமல் இதில் அரசியலைப் புகுத்தி, அதன் மூலம் நீங்கள், உங்களுடைய கட்சியை பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்களானால், அது நடக்கவே நடக்காது என்பதை நான் அழுத்தந்திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

