செஞ்சி சந்தையில் ஒரேநாளில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை.. இதுதான் காரணம் !!
செஞ்சி சந்தையில் ஒரேநாளில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை.. இதுதான் காரணம் !!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். செஞ்சி சந்தையில் கருவாடு, ஆடுகள் அதிகளவில் விற்பனையாகும். எனவே இந்த சந்தைக்கு விழுப்புரம் மட்டுமல்லாமல் சேலம், தருமபுரி, வேலூர், ஆம்பூர் மற்றும் புதுவை, பெங்களுரு போன்ற பகுதியில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவருவர்.
மேலும் அங்கிருந்து வரும் வியாபாரிகள், மக்கள் ஆடுகளை வாங்கியும் செல்வார்கள். இதனால் இந்த சந்தையில் பெரியளவில் வர்த்தகம் நடைபெறும். இந்த நிலையில், வரும் 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வரவுள்ளது. இதையொட்டி இன்று கூடிய சந்தையில் கூடுதலாக ஆடுகள் விற்பனைக்கு வந்தது.

அதேநேரத்தில், ஆடுகளை வாங்குவதற்காக பெங்களுரு மற்றும் சேலம், திருவண்ணாமலை, வேலுர், தருமபுரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் செஞ்சி வார சந்தையில் குவிந்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள் என கருதி சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்
அதன்படி அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்ததால் தான் விலையும் சிறிது குறைவாகவே இருந்தது. மேலும் விற்பனையும் படுவிறுவிறுப்பாக இருந்தது. பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக செம்மறி ஆடுகள் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையிலும் கருப்பு ஆடுகள் ரூ. 8000 முதல் ரூ.15,000 வரையும் விற்கப்பட்டது. இந்த வார சந்தையில் மட்டும் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யபட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 5 கோடி ஆகும் என வியாபாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
newstm.in

