டீசல் விற்கும் விலைக்கு இதெல்லாம் தேவையா? - சசிகலாவுக்கு ஜெயக்குமார் கேள்வி !!
டீசல் விற்கும் விலைக்கு இதெல்லாம் தேவையா? - சசிகலாவுக்கு ஜெயக்குமார் கேள்வி !!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு பெருவாரியான ஆதரவாளர்கள் இருப்பதால் அவர் கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கவும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் வருகிற ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், பொதுக்குழுவுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஏனெனில், அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக விரோதிகளைத் தூண்டி எதிர் தரப்பினர் பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பொதுக்குழு கூட்டம் சட்ட ரீதியாக நடைபெறுவதால் சட்டப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுக்குழு நடைபெறாமல் இருக்க வேண்டாதவர்கள் முயற்சி செய்வதாகவும் அதைத் தடுக்கும் வகையில் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி உறுதி அளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் சுற்றுப்பயணம் செல்வது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் தற்போது டீசல் விற்கும் விலைக்கு இதெல்லாம் தேவைதானா? ஆளாளுக்கு ஒரு வேனில் செல்கிறார்கள். உண்மையில், பணம், நேரம், எரிபொருள் என அனைத்தும் வேஸ்ட்தான்.
அதுமட்டுமின்றி அதிமுகவில் கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
newstm.in

