தனியார் பள்ளி வன்முறைக்கு இதுதான் காரணம்? - முதற்கட்ட விசாரணையில் பகீர் தகவல் !
தனியார் பள்ளி வன்முறைக்கு இதுதான் காரணம்? - முதற்கட்ட விசாரணையில் பகீர் தகவல் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. இதில் நான்காவது நாளாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதில் பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை சூறையாடினர். பள்ளி வாகனம் மற்றும் காவல்துறை வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். பள்ளியில் உள்ள பொருட்களை கலவரக்காரர்கள் சூறையாடினர். தமிழகத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாணவி மரணம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் பள்ளியில் கலவரம் தொடர்பாக சிறப்பு குழு அமைத்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

போராட்டக்காரர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே வன்முறைக்கு காரணம் குறித்தும் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்துகின்றனர். இதனிடையே முதற்கட்ட விசாரணை தகவல் வெளிவந்துள்ளது.
இது குறித்து காவல்துறை தரப்பில் வெளியான தகவலில், மாணவி இறப்புக்கு நீதி வேண்டும் என்பது குறிப்பிட்ட சிலருக்கு முக்கிய நோக்கம் இல்லை. பள்ளியை சேதப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே கலவரக்காரர்களிடம் இருந்துள்ளது. இதற்காக, மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்பது போன்று, போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அந்த கும்பல், வன்முறையில் ஈடுபட்டுள்ளது.

இதற்கு முழு காரணம் அப்பகுதி மக்களுக்கு, பள்ளியின் தாளாளர் மீதான வெறுப்பு தான் என்று கூறப்படுகிறது. பள்ளி தாளாளர் ரவிக்குமார், அதிக கடனில் இருந்துள்ளார். இதனால், கல்விக் கட்டணத்தை கறாராக வசூலித்துள்ளார். மாணவர்கள், பெற்றோரிடமும் ரவிக்குமார் கறாராக நடந்துள்ளார். ஒரு லட்சம், இரண்டு லட்சம் என பெற்றோர்களிடம் கல்விக்கட்டணம் வசூலித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

எந்த அமைப்பாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும் நன்கொடை தர மறுத்துள்ளார். இதனால், ரவிக்குமார் மீது பல்வேறு அமைப்புகளுக்கு கோபம் இருந்துள்ளது. அரசியல் கட்சியினரிடமும் ரவிக்குமார் பகையை சம்பாதித்து உள்ளார். இப்படி பல்வேறு தரப்பினரிடையே ரவிக்குமார் எதிர்ப்பை சம்பாதித்ததே, இந்த கலவரத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
newstm.in

