தடையில்லா சான்று பெற இது கட்டாயம்.. புதிய நடைமுறையை அறிமுகம்..!
தடையில்லா சான்று பெற இது கட்டாயம்.. புதிய நடைமுறையை அறிமுகம்..!

கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து வகையான குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை, கடந்த கால விபரம் உட்பட அனைத்து விதமான தகவல்களும் குற்ற ஆவண காப்பகத்தில் போலீசார் பட்டியலிட்டு வைத்திருப்பது வழக்கம்.
மேலும், விபத்துகள், விதி மீறல்கள் தொடர்பான தகவல்கள், ரவுடிகள், குற்றவாளிகளின் விபரங்களும் புகைப்படத்துடன் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல், பாதுகாப்புக்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களின் விவரங்களும் அங்கு இருக்கும். இதுமட்டுமின்றி, சொத்து ஆவணங்கள் காணாமல் போனால், அது தொடர்பாக தடையில்லா சான்று வழங்கும் பொறுப்பும் இந்த பிரிவு போலீசாருக்கு உள்ளது.
சமீபகாலமாக பலர், ஆவணங்கள் காணாமல் போகாத நிலையில் அல்லது பிறரின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில், சென்னை குற்ற ஆவணக் காப்பக போலீசாரிடம் விண்ணப்பித்து, தடையில்லா சான்று பெற முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இத்தகைய மோசடிகளை முற்றிலும் தடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, காணாமல் போன ஆவணங்கள் தொடர்பான புகார்கள் மீதான விசாரணைக்கான புதிய வழிகாட்டுதல்களை சென்னை குற்ற ஆவண காப்பக போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, ஆவணம், வாகனம், சான்றிதழ்கள் காணாமல் போனதாக குறிப்பிட்டு, அதை புதிதாக பெறுவதற்கு தடையில்லா சான்று பெற விண்ணப்பித்தால், புகார் அளித்தவர் கூறுவது உண்மையா? என குற்ற ஆவண காப்பக போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள்.
குறிப்பாக, புகார்தாரர் ஆவணங்களைத் தவற விட்டதாக குறிப்பிடப்பட்ட இடத்துக்கு அப்பகுதி காவல் நிலைய போலீசாருடன் சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்வார்கள்.
அதைத் தொடர்ந்து, தவற விட்டவரின் செல்போன் எண்ணை பெற்று, சம்பவத்தன்று சம்பவ இடத்தில் அவர் இருந்தாரா? அல்லது வேறு எங்காவது இருந்தாரா? என்பதை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செல்போன் டவர் லொகேஷன் எடுப்பார்கள்.
மேலும், ஆவணம் தொலைந்து போன புகாரை உறுதிப்படுத்தும் வகையில் குறைந்தபட்சம் 3 சாட்சிகளின் வாக்குமூலம் பெறப்படும்.
இவைகளில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், அதுகுறித்த தொடர் விசாரணையில் உண்மைத்தன்மை வெளியாகி விடும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொருட்கள், வாகனங்கள், ஆவணங்கள் திருடப்பட்டால் அல்லது தவற விட்டால் மற்றும் தொலைந்து போனால் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட குற்றப்பிரிவு போலீசார் முதல்கட்டமாக புகார் மனுவை பெற்று விசாரணை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு 19 வழிகாட்டுதல்களை காவல் ஆணையர் வழங்கியுள்ளார்.
அதன்படி, காணாமல் போன ஆவணங்கள் தொடர்பாக காவல் நிலைய போலீசாரின் விசாரணை நடைபெறும். அதைத் தொடர்ந்து, குற்ற ஆவணக் காப்பக போலீசார் தடையில்லா சான்று வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

