ரேஷன் கடைகளில் இது கட்டாயம் இருக்கணும்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
ரேஷன் கடைகளில் இது கட்டாயம் இருக்கணும்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பண்டங்கள் இருப்பு தகவல்கள் அடங்கிய தகவல் பலகைகள் பராமரித்து வைக்கப்பட வேண்டுமென அறிவுரைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. அதன் செயலாக்கம் கோரி தொடர்ந்து நினைவூட்டப்பட்டு வருகிறது.
ஆனால், தற்போது அட்டைதாரர்களிடமிருந்து பெறக்கூடிய புகார்களின் அடிப்படையிலும், நியாய விலைக் கடைகள் தணிக்கையின்போது அறியக்கூடிய விவரங்களின் அடிப்படையிலும் தகவல் பலகைகள் நியாய விலைக் கடைகளில் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என தெரிய வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக ஏற்கெனவே வழங்கிய அறிவுரைகள் கீழ்க்கண்டவாறு இடம்பெற மீண்டும் நினைவூட்டப்படுகின்றன.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தகவல் பலகைகள் பண்டங்கள் இருப்பு விவரங்களை உள்ளடக்கி குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இன்றியமையாப் பண்டங்கள் இருப்பு விவரம் கடை பணியாளரால் தினசரி பூர்த்தி செய்து காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
அறிவிப்பு பலகைகள் விவரம் பின்வருமாறு:
வேலை நேரம், நியாய விலைக் கடையில் இன்றியமையாப் பண்டங்கள் (சிறப்பு அத்தியாவசிய பண்டங்கள் உட்பட) இருப்பு விவரம், ஆரம்ப இருப்பு பெறப்பட்டது, விநியோகம் செய்யப்பட்டது, இறுதி இருப்பு உள்ளிட்ட விவரங்களை தினசரி பராமரிக்க வேண்டும். இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படும் அளவு மற்றும் விற்பனை விலை இடம் பெற வேண்டும்.
நியாய விலைக் கடை தொடர்பாக புகார் தெரிவிக்கக் கூடிய உயர் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் செல்போன் எண்கள்:
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர், 044-25671427.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, 044-25672224.
ஆணையாளர் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, 044-28592255.
சென்னை மாவட்ட துணை ஆணையாளர் (உ.பொ.வ) (வடக்கு /தெற்கு),
மாவட்ட கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் (பொ.வி.தி)
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல உதவி ஆணையர் (உ.பொ.வ) / வட்ட வழங்கல் அலுவலர்.
மேலும், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளர். மாநில நுகர்வோர் சேவை மைய தொலைபேசி எண் 044-28592828, இலவச தொலைபேசி உதவி மைய எண் ஆகியவை இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

