இங்கெல்லாம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியில்லை.. தமிழக அரசு !!
இங்கெல்லாம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியில்லை.. தமிழக அரசு !!

அரசிதழில் இல்லாத பகுதிகளில் வடமாடு, மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கண்டனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் மனு அளித்து எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மஞ்சுவிரட்டு போட்டிக்காக அனுமதி கோரினால் உடனடியாக அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, கோவில் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்துவது குறித்து பல்வேறு வழக்குகள் தினம்தோறும் பட்டியலிடப்படுகிறது. அரசிதழில் இல்லாத பகுதிகளில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.
அரசு தரப்பில், அரசிதழில் இல்லாத பகுதிகளில் வடமாடு மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
newstm.in

