ஜெயலலிதா மரணம் வழக்கு.. ஓபிஎஸ் நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் !!
ஜெயலலிதா மரணம் வழக்கு.. ஓபிஎஸ் நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் !!

ஜெயலலிதா உயிரிழந்து சுமார் 6 ஆண்டுகள் கடந்தும், அவரது மரணத்தில் உள்ள மர்மம் விலகாமல் உள்ளது. அதிமுகவில் பெரும் குழப்பத்தையும் பிரச்சனையும் அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், முதலில் குழப்பத்தை ஏற்படுத்தியவர் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தான். அதாவது, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் மேற்கொண்டார்.
அதிமுக ஒருங்கிணைந்த போது, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.

இதனிடையே, 3 ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணை தொடங்கியது. இதையடுத்து விசாரணையில் சூடுபிடிக்க தொடங்கியது. இன்று நடைபெற்ற விசாரணையில், 2016, டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான் என்றும் அதற்கு உரிய சிகிச்சை அனைத்தும் அளிக்கப்பட்டதாகவும் விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில், ஜெயலலிதா மரண விசாரணை குறித்து ஆணையம் விரைவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

அந்த வகையில், வரும் 21ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஓ.பன்னீர்செல்வத்திற்கும், சசிகலாவின் உறவினர் இளவரசிக்கும் ஆறுமுசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இதுவரை ஓ.பன்னீர் செல்வத்திற்கு 9 முறை சம்மன் அனுப்பப்பட்டது. பல்வேறு காரணங்களால் நேரில் ஆஜராக முடியாமல் இருந்த சூழ்நிலையில், வரும் 21ஆம் தேதி அவர் ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிப்பார் எனக் கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆணையத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், மூன்றாண்டு காலம் நீதிமன்ற வழக்கு காரணமாக விசாரணை நடைபெறாமல் இருந்தது. தற்போது மீண்டும் விசாரணை தொடங்கியிருப்பதால் ஓ.பன்னீர்செல்வத்தை எப்போது ஆணையம் விசாரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
newstm.in

