கனியாமூர் பள்ளி கலவரம்.. இதுதான் காரணமா..?: தடயவியல் நிபுணர்கள் ஆய்வு..!
கனியாமூர் பள்ளி கலவரம்.. இதுதான் காரணமா..?: தடயவியல் நிபுணர்கள் ஆய்வு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பது குறித்து, விழுப்புரம் மாவட்ட தடய அறிவியல் துணை இயக்குநர் சண்முகம் தலைமையிலான நிபுணர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் என்ன மாதிரியான பொருட்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டனர், என்ன ஆயுதங்களை பயன்படுத்தினர், வெடிபொருட்களை கொண்டு வந்தனரா என ஆய்வு செய்தனர்.
மேலும், தீ வைப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்திய எரிபொருள், வன்முறையாளர்களின் நோக்கம் உள்ளிட்டவை குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
இதன்போது, பள்ளி வளாகத்தில் இருந்த மது பாட்டில்கள், சுத்தியல், தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சியின் அடையாளத்துடன் கூடிய துண்டு மற்றும் ‘தென் புரட்சியாளர்கள்’ என்று பெயரிடப்பட்ட போராட்ட பதாகை உள்ளிட்டவற்றையும் கண்டெடுத்துள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்ட கும்பல், பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் சேதப்படுத்தி, அவற்றின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச் சென்றுள்ளதும், சிலவற்றை சேதப்படுத்தி வீசியும் சென்றுள்ளதாக தடயவியல் சோதனையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தடய அறிவியல் துணை இயக்குநர் சண்முகம் கூறும்போது, “தடயங்களை சேகரித்து வருகிறோம். இந்தப் பள்ளி இனி செயல்படக் கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த வன்முறை நடைபெற்றிருப்பது போல் இருக்கிறது. இருப்பினும், முழுமையான ஆய்வுக்குப் பின்னரே உறுதியாக தெரிவிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

