கடன் பிரச்சினையால் பழனியில் தற்கொலை செய்து கொண்ட கேரள தம்பதி..!!
கடன் பிரச்சினையால் பழனியில் தற்கொலை செய்து கொண்ட கேரள தம்பதி..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுகுமாரன்-சத்தியபாமா தம்பதியினர் பழனிக்கு நேற்று காலை வந்துள்ளனர். அவர்கள் அடிவாரத்தில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர், பழனி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தங்களது அறைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு தம்பதியினர் தங்கி இருந்த விடுதிக்கு கேரளாவைச் சேர்ந்த சிலர் அழுதபடியே வந்துள்ளனர். இதுகுறித்து, விடுதி ஊழியர்கள் அவர்களிடம் கேட்டபோது, இந்த விடுதியில் தங்கியுள்ள சுகுமாறன்-சத்யபாமா இருவரும் தங்களது உறவினர்கள் என்றும், அவர்கள் இருவரும் இந்த விடுதியின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து தங்களுக்கு அனுப்பி, தாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ்அப்பில் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தம்பதி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர்.

மேலும், தங்களது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும், தாங்கள் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்துகொள்வதாக மலையாளத்தில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து, இறந்தவர்களின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

