மீன் பிடிக்க ஏரி உடைப்பு.. 300 ஏக்கர் பயிர்கள் சேதம்.. வேதனையில் விவசாயிகள்..!
மீன் பிடிக்க ஏரி உடைப்பு.. 300 ஏக்கர் பயிர்கள் சேதம்.. வேதனையில் விவசாயிகள்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இது, மாவட்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரியை நம்பி, ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஏரியில் மீன் பிடிப்பதற்காக அடையாளம் தெரியாத சிலர் ஏரியின் மதகை உடைத்துள்ளனர். இதனால் கடைசிக் குளம் கிராம பகுதியில் உள்ள விளை நிலங்களில் தண்ணீர் வீணாக வெளியேறி சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.
இதனால், ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலையில் உள்ள நிலையில் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, ஏரியின் மதகு உடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை வெளியே வராத அளவுக்கு சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், ஏரி மதகை உடைத்த மர்ம நபர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

