ஆசிரியர்களுக்கு லேப்டாப்.. பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை..!
ஆசிரியர்களுக்கு லேப்டாப்.. பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை..!

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்டது போக மீதம் உள்ள மடிக்கணினிகளை ஆசிரியர்களின் பயிற்சிக்கு பயன்படுத்த வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது போக, மாவட்டங்களில் இருப்பில் உள்ள 55819 விலையில்லா மடிக்கணினிகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலமாக அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளியில் செயல்பட்டு வரும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வு கூடத்திற்கு வழங்க பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில், அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககத்தால் மாவட்டங்களில் நடத்தப்படும் பயிற்சிக்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது போக மீதம் உள்ள மடிக்கணினிகளை வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பணிபுரியும் உதவி திட்ட அலுவலரால் கோரப்படும் மடிக்கணினிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து பெற்று வழங்க வேண்டும்.
வழங்கப்பட்ட மடிக்கணினிகளின் விவரங்களை மின்னஞ்சல் மூலமாகவும், கையொப்பமிட்ட பிரதிகளை விரைவு அஞ்சல் மூலமாகவும் வரும் 15-ம் தேதிக்குள் இணை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டங்களில் மடிக்கணினிகள் இருப்பில் இல்லாத பட்சத்தில் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து பெற்று உதவி திட்ட அலுவலருக்கு வழங்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Next Story

