இந்தியர்களின் ஆயுள் 5 ஆண்டுகள் குறையப் போகுது.. வெளியான அதிர்ச்சி காரணம் !!
இந்தியர்களின் ஆயுள் 5 ஆண்டுகள் குறையப் போகுது.. வெளியான அதிர்ச்சி காரணம் !!

மனித வாழ்க்கை மற்றும் உடல் ஆரோக்கத்தில் காற்றின் தரம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, உலக புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தின் எனர்ஜி பாலிசி இன்ஸ்டிட்யூட் மேற்கொண்ட ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையில், இந்தியாவில் இருக்கும் கங்கை நதியை சுற்றியுள்ள சமவெளி பகுதிதான் உலகிலேயே அதிகம் மாசடைந்த பகுதியாக உள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரையிலான இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் சராசரி ஆயுட் காலத்தில் 7 ஆண்டுகள் 6 மாதங்கள் இழப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதிக மாசு உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகள் அதிக காற்று மாசு உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் சராசரி இந்தியர்களின் ஆயுட்காலத்திலிருந்து 5 ஆண்டுகள் குறையும் அபாயம் ஏற்படும். உலக அளவில் காற்று மாசு காரணமாக ஆயுட் காலம் 2.2 ஆண்டுகள் குறையும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது
குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் காற்று மாசு மிக மோசமான அளவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. காற்றின் மாசு தற்போதைய நிலை நீடித்தால் டெல்லி மக்களின் சராசரி ஆயுள் 10.1 ஆண்டுகள், உத்தரப்பிரதேச மக்களின் சராசரி ஆயுள் 8.9 ஆண்டுகள், பீகார் மக்களின் ஆயுள் 7.9 ஆண்டுகளாக குறையும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.
இந்த காற்று மாசுக்கு தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையிலும், நாட்டில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தே இருந்தது.

இந்தியாவில், உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பான காற்றின் மாசு அளவை விட சுமார் 10 மடங்கு அதிகமாக மாசடைந்துள்ளது டெல்லி நகரம். இதன் PM 2.5 அளவு சுமார் 107.6 என அளவிடப்பட்டுள்ளது. PM 2.5 என்பது நுரையீரலிலும், பிற உறுப்புகளிலும் காற்று மூலமாக நுழையும் சிறிய துகள்கள் ஆகும். இவை நச்சுத்தன்மை கொண்டவை.
கடந்த 20 ஆண்டுகளில், இந்தப் பகுதிகளில் வாகனங்கள் பல மடங்கு அதிகரிப்பு, மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரித்த நிலக்கரி அனல் மின் நிலையங்கள் முதலானவை காற்று மாசின் அடிப்படைக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. பயிர்களை எரிப்பது, செங்கல் சூளைகள், தொழிற்சாலையில் வெளியேறும் புகை ஆகியவையும் இதன் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
இந்த காற்று மாசு கருவில் வளரும் சிசு தொடங்கி அனைவருக்கும் சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 ஆண்டுகள் வரை குறையும் எனத் தெரிய வந்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

