லாக்கப் மரணம் - 3 காவல் நிலையங்கள் சூறை!!
லாக்கப் மரணம் - 3 காவல் நிலையங்கள் சூறை!!

பீகாரில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இசைக்கலைஞர் திடீரென லாக்கப்பில் உயிரிழந்ததால் வன்முறை ஏற்பட்டது.
பீகார் மாநிலம் சாம்பரான் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை ஒட்டி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அனிரூத் என்ற இசைக்கலைஞருக்கு வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது. இதில் அரசு அலுவலர் மீனா சர்மா என்பவரும் மனீஷ் குமார் என்பவரும் அனிருத் மீது போலீசில் புகார் அளித்தனர்.
அப்போது, வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததுடன் அனிரூத்தை பல்தார் என்ற இடத்தில் உள்ள காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் 2 மணி நேரத்தில் அனிரூத் உயிரிழந்துவிட்டதாக அவரின் உடல் காவல்நிலைய வாசலில் வைக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அனிரூத்தின் உறவினர்கள், காவல்நிலையத்தை தீவைத்து கொளுத்தினர். பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள் காயமடைந்தனர். ராம் ஜதன்சிங் என்ற காவல் அதிகாரி உயிரிழந்தார். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
அனிரூத்தின் ஆதரவாளர்கள், கோபால்பூர், புருஷோத்தம்பூர் காவல்நிலையங்களையும் தாக்கினர். கூட்டம் கட்டுக்கடங்காததால் 15 சுற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். லாக்கப் மரணத்தால் சாம்பரன் மாவட்டத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

நிலைமையை கண்காணிக்க காவல்துறை உயர் அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகத்தினரும் முகாமிட்டுள்ளனர். கிராமத்தில் கலவரம் மேலும் பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.
newstm.in

