நகராட்சித் தலைவர் படுகொலை.. திமுக நிர்வாகி உட்பட 8 பேர் விடுதலை..!
நகராட்சித் தலைவர் படுகொலை.. திமுக நிர்வாகி உட்பட 8 பேர் விடுதலை..!

கடந்த 2007-ம் ஆண்டு சிவகங்கை நகராட்சித் தலைவராக இருந்தவர், முருகன். இவர், நகராட்சி அலுவலகத்தில் இருந்து தனது காரில் வீட்டிற்குச் சென்றபோது, குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், அவருடைய கார் ஓட்டுநர் பாண்டிக்கு இரண்டு கால்களும் துண்டாகின.
இச்சம்பவம் தொடர்பாக திமுக மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து மற்றும் மந்தக்காளை, பாலா, சரவணன், மாமுண்டி (எ) செந்தில், கே.கண்ணன், வீரபாண்டி, பி.கண்ணன், முருக பாண்டி, கம்பம் மனோகரன், சென்னை வீரமணி ஆகிய 11 பேர் மீது அப்போதைய டவுன் காவல் ஆய்வாளர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்தார்.
இவ்வழக்கில் 139 பேர் சாட்சிகளாக இருந்தனர். கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பாலா, முருக பாண்டி ஆகியோர் உயிரிழந்தனர். வீரபாண்டி என்பவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு மாவட்ட அமர்வு முதன்மை நீதிமன்ற நீதிபதி சுமதி சாய் பிரியா முன்பு நேற்று (23-ம் தேதி) விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதி, அரசு தரப்பில் எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாததால் திமுக மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து உட்பட 8 பேரும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்கினார்.

