உதயநிதி காலில் விழுந்த மேயர்.. பதவி விலக வலுக்கும் கோரிக்கை..!
உதயநிதி காலில் விழுந்த மேயர்.. பதவி விலக வலுக்கும் கோரிக்கை..!

திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என மாவட்ட வாரியாக திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ‘திராவிடத் திருவிழா’ என்ற பெயரில் மாவட்டந்தோறும் உதயநிதி சுற்றுப்பயணம் செல்கிறார். கட்சியில் நலிந்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி, கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் உதயநிதி பங்கேற்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் உதயநிதி சுற்றுப்பயணம் சென்றார். அப்போது, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா, பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவில் பங்கேற்கச் சென்ற உதயநிதிக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன், மேயர் அங்கி அணிந்திருந்த நிலையில் திடீரென உதயநிதி காலில் விழுந்து வணங்கினார். இந்த வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேயர் பதவி மற்றும் மேயர் நாற்காலி, அங்கி உடை, செங்கோல் போன்றவைக்கு பராரம்பரிய மரியாதையும், மரபும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாரம்பரிய அங்கி அணிந்த மேயர் உதயநிதி காலில் விழுந்து வணங்கியதால், வணக்கத்துக்குரிய மேயரின் மாண்புக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில், மேயர் காலில் விழும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கலமா, இது தான் சமூக நீதியா, சமத்துவமா..? என்ற கேள்விகளை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பலரும் திமுகவை வறுத்து எடுக்கின்றனர்.
மேலும், மேயர் ராமநாதன் உடனே தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

