சந்திக்க நேரம் ஒதுக்காத மோடி.. பயணத்தை பாதியில் முடித்த இபிஎஸ்..!
சந்திக்க நேரம் ஒதுக்காத மோடி.. பயணத்தை பாதியில் முடித்த இபிஎஸ்..!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, டெல்லியில் பிரதமர் மோடி நடத்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கான பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 4 நாள் பயணமாக கடந்த 22-ம் தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அன்று இரவு டெல்லி அசோகா ஹோட்டலில் நடந்த ஜனாதிபதி பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் இன்று (25-ம் தேதி) வரை டெல்லியில் தங்கி இருந்து புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்முவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாகவும் திட்டமிடப்பட்டு இருந்தது.
எடப்பாடி பழனிசாமி டெல்லியில் தங்கி இருக்கும் நாட்களில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவும் திட்டமிட்டு இருந்தார்.
இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திப்பதற்கு நேரம் கேட்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழா, புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பதவியேற்பு விழா என்று தொடர் நிகழ்வுகள் காரணமாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்கவில்லை.
இதனால் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ள புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்பினார்.