சுவற்றுக்குள் கட்டுக்கட்டாக பணம்... அதிர்ந்த ஜி.எஸ்.டி அதிகாரிகள்!!
சுவற்றுக்குள் கட்டுக்கட்டாக பணம்... அதிர்ந்த ஜி.எஸ்.டி அதிகாரிகள்!!

நகை வியாபார நிறுவன அலுவலகத்தில் இருந்து 10 கோடி பணம், வெள்ளிக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் சாமுன்டா என்ற நகை வியாபார நிறுவனத்தின் நிகர வருவாய் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.23 லட்சத்தில் இருந்து ரூ.1,764 கோடியாக உயர்ந்திருந்தது ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அது ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் சோதனை நடத்தினர்.

கல்பாதேவி பகுதியில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. சல்லடை போட்டு சலித்தும் அந்த அலுவலகத்தில் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அறையின் ஓரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் டைல்ஸ் கல் பதிக்கப்பட்டிருந்தது. அதை அதிகாரிகள் அகற்றினர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சிறிய பாதாள அறைக்குள் மூட்டை, மூட்டையாக பணம் இருந்தது. 19 கிலோ வெள்ளி கட்டிகளும் இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிகாரிகள் அந்த அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தினர். அப்போது அலுவலக சுவரில் ரகசிய அலமாரி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்தும் பணப்பையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து அலுவலகத்தில் கிடைத்த ரூ.9 கோடியே 80 லட்சம் ரொக்கம், ரூ.13 லட்சம் வெள்ளி கட்டிகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கட்டுக்கட்டாக பணம், வெள்ளிக்கட்டிகள் எப்படி வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

