ரப்பர் படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்!!
ரப்பர் படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகே முனைக்காடு பகுதியில் நேற்று காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு கரை ஒதுங்கி நின்றது. கடலோர காவல் குழும போலீஸார் விரைந்து வந்து படகை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
கரை ஒதுங்கிய படகு 13 அடி நீளமும், 3 அடி அகலம் கொண்டதாகும். அதில் இலங்கையில் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டில்கள், படகு துடுப்புகள், லைப் ஜாக்கெட், டிராவல் பேக், ஒரு ஜோடி காலணி ஆகியவை கைப்பற்றப்பட்டது.
தகவலறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், கப்பற்படை அதிகாரிகள், கடற்கரையில் ஒதுங்கியுள்ள படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாகையிலிருந்து மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு படகை மோப்பம் பிடித்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் நுழைந்து ஓடியது. இந்நிலையில், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் பதுங்கியிருந்த போலந்து நாட்டுக்காரர் ஒருவரை போலீஸார் நேற்றிரவு கைது செய்தனர்.
விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த அவரிடம், இவர் யார்? எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்தும், இவருடன் எத்தனை நபர்கள் வந்துள்ளனர் என்பது குறித்தும் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
newstm.in