நீட் விலக்கு மசோதா : குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு!!
நீட் விலக்கு மசோதா : குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு!!

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கக்கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை இந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
ஆனாலும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதில் உறுதியாக இருந்த தமிழக அரசு, பிப்ரவரி 8ஆம் தேதி மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

இதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தமிழக அரசு ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது. சட்டமன்ற மாண்பையும் மக்களையும் ஆளுநர் மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அரசு முன்வைத்தது. ஆளும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டிலும் ஆளுநரை விமர்சித்து கட்டுரைகள் வெளிவந்தன.
இந்த சூழலில் நீட் விலக்கு மசோதா தொடர்பான தமது பரிசீலனை மற்றும் குறிப்பெழுதும் பணிகள் நிறைவுபெற்றதால் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான விவரங்களை முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முறைப்படி தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
newstm.in

