தேமுதிகவில் பிரேமலதாவுக்கு புதிய பதவி? - நிர்வாகிகள் குமுறல் !!
தேமுதிகவில் பிரேமலதாவுக்கு புதிய பதவி? - நிர்வாகிகள் குமுறல் !!

தேமுதிக உள்கட்சி தேர்தல் பணிகள் கடந்த 10ஆம் தேதி தொடங்கி உள்ளது. அதன்படி வருகிற 24ஆம் தேதி வரை 15 நாட்கள் முதல் கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. சேலம் கிழக்கு, மாநகர் சேலம் மேற்கு மாவட்டங்களில் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள கிளை கழங்களில் 9 கிளை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஊராட்சி கழகத்துக்கு செயலாளர், 2 துணை செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதேபோல், மாநகராட்சி பகுதியில் வட்ட செயலாளர், அவை தலைவர், பொருளாளர், 4 துணை செயலாளர்கள், பகுதி பிரதிநிதிகள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுபோன்று அனைத்து மாவட்டங்களுக்கும் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

உள்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதும் தேமுதிக பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளரான பிரேமலதாவுக்கு கூடுதலாக முக்கிய பதவி வழங்கப்பட உள்ளது. அதாவது, கட்சியின் செயல் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதுபோன்று விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரனுக்கு இளைஞர் அணியில் பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர் அணி மாநில செயலாளராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே, கட்சியின் தலைவரான விஜயகாந்த் உடல்நல பாதிப்பால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்.

அவர் வீட்டிலேயே இருக்கும் நிலையில் அவ்வப்போது புகைப்படங்களை மட்டும் குடும்பத்தினர் வெளியிட்டு வருகின்றனர். விஜயகாந்த் உடல் பாதிப்புக்கு பிறகு பிரேமலதா விஜயகாந்த் கட்சியை வழிநடத்துகிறார். ஆனால், அவரது செயல்பாட்டில் பெரியளவில் மாற்றம் இல்லையெனவும் அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்வியை சந்தித்து வருவதாகவும் நிர்வாகிகள் மறைமுகமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அவருக்கு கூடுதலாக பதவி வழங்குவதால் நிர்வாகிகள் மட்டத்தில் எதிர்ப்பு எழக்கூடும் என கூறப்படுகிறது.
newstm.in

