மாணவர்கள், இளைஞர்களுக்கு புதிய திட்டம்.. பிறந்த நாளில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!
மாணவர்கள், இளைஞர்களுக்கு புதிய திட்டம்.. பிறந்த நாளில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று (1-ம் தேதி) 69-வது பிறந்தநாள். அத்துடன், தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னையில் வாழ்த்து அரங்கம், கவி அரங்கம், கருத்தரங்கம், இசை அரங்கம், நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதே போன்று மற்ற மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
அதன்பின்னர், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் ‘நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம்’ என்ற பெயரில் பள்ளி - கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் கிளவ்டு கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஜப்பான், சீன, ரஷ்ய, பிரெஞ்ச் மொழிகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

