காங்கிரசுக்கு அடுத்த அடி.. முக்கிய தலைவர் விலகல்..!
காங்கிரசுக்கு அடுத்த அடி.. முக்கிய தலைவர் விலகல்..!

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் படேல் சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களின் ஓட்டுகளை பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் என கருதப்படுகிறது.
இந்த சமூகத்தை சேர்ந்த ஹர்திக் படேல் சில ஆண்டுகளுக்கு முன் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் ஹர்திக் படேலை 2019-ம் ஆண்டு கட்சியில் இணைத்தனர். அவருக்கு, குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
சில நாட்களாக காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியில் இருந்து வந்த ஹர்திக் படேல், சமீபத்தில் சமூக வலைதளங்களில் இருந்து குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் என்ற தன் சுய விவரத்தை நீக்கினார். இதனால், அவர் காங்கிரசில் இருந்து வெளியேறலாம் என தகவல் வெளியாகின.
இந்நிலையில், இன்று(18-ம் தேதி) காங்கிரசில் இருந்து ஹர்திக் படேல் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகி உள்ளேன்.
இதனை சக நிர்வாகிகள் மற்றும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன். எதிர்காலத்தில், மாநிலத்தின் நலனுக்காக உழைக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரசில் இருந்து ஹர்திக் படேல் விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

