அதிமுகவில் அடுத்த விக்கெட்.. பாஜகவுக்கு செல்கிறாரா சைதை துரைசாமி ?
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. பாஜகவுக்கு செல்கிறாரா சைதை துரைசாமி ?

பிரதமர் மோடி மன்கிபாத் (Mann Ki Baat) என அழைக்கப்படும் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலம் கடந்த 2014 அக்டோபர் 3ஆம் தேதி முதல் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் அவ்வப்போது நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், பாமர மக்கள், எளிய பின்னணி கொண்டவர்கள் குறித்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் உரையை தொகுத்து ’மனதின் குரல்’ என்ற பெயரில் தமிழ்நாடு பாஜக சார்பில் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் இந்த புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மனதின் குரல் புத்தகத்தை வெளியிட, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமி அதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக வலம் வரும் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, மனிதநேயம் அறக்கட்டளை என்ற பெயரில் இந்திய குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அதிமுகவில் இருந்தாலுல், பெரும்பாலும் கட்சி கூட்டங்கள், போராட்டங்களில் அவர் பங்கேற்பது இல்லை.

ஆனாலும், கட்சித் தலைமை கடந்த சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் சீட் கொடுத்தது. எனினும் தற்போதைய அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தோல்வியடைந்தார். அதன் பிறகு அதிமுக அலுவலகம் பக்கம் தலையை கூட காட்டாமல் அமைதி காத்து வந்தார்.
இந்த நிலையில், பாஜகவின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர், அண்ணாமலையை ’நெருப்பு’ என புகழ்ந்தது அதிமுக தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரதமர் மோடி குறித்தும் புகழ்ந்து தள்ளினார். ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் தோல்விக்கு பிறகு அதிமுகவில் சசிகலா தலையீடு காரணமாக உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், சைதை துரைசாமி பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சைதை துரைசாமி, பாஜக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டேன். 14 வயது முதல் எம்.ஜி.ஆரின் கைகளை பிடித்து நடந்த நான் எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன், என கூறினார்.
newstm.in

