பட்ஜெட்டால் பலன் இல்லை.. வானதி சீனிவாசன் கருத்து..!
பட்ஜெட்டால் பலன் இல்லை.. வானதி சீனிவாசன் கருத்து..!

“மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல திட்டங்களை தமிழாக்கம் செய்து, தாங்கள் கொண்டு வந்த புதிய திட்டங்கள் போல் இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்” என, வானதி சீனிவாசன் கூறினார்.
தமிழக அரசின் பட்ஜெட் குறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: “கோவையில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் கயிறு வணிக நிறுவனம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொள்ளாச்சியில் கயிறு வாரிய அலுவலகம் செயல்படுகிறது. அதனால் புதிய திட்டங்களை கொண்டு வருவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் உதவி திட்டம் மற்றும் மானியம் குறித்த அறிவிப்பு எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை. தொழில் துறையினருக்கு பலன் தரும் எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடமாடும் மையம் அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, அவர்களுக்கு நிரந்தரமான மையம் அமைப்பதுதான் தீர்வாக இருக்கும்.
பெண்கள் திருமண உதவி திட்டத்தை உயர்கல்வி உதவி திட்டமாக மாற்றி அறிவித்துள்ளனர். இதை காரணம் காட்டி திருமண உதவித் திட்டத்தை நிறுத்தி விடக்கூடாது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல திட்டங்களை தமிழாக்கம் செய்து, தாங்கள் கொண்டு வந்த புதிய திட்டங்கள் போல் இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். குறிப்பாக, 'அரசு பொருட்களை ஆன்லைன் வழியாக வாங்குதல்' என்பது ‘ஜெம் போர்ட்டல்’ என்ற மத்திய அரசின் திட்டம்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் துவங்குவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி, பெண்களுக்கான மாத உதவித்தொகை, சிலிண்டருக்கான உதவித் தொகை என, பல வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றவில்லை” என அவர் கூறினார்.

