“அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது”!
“அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது”!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, திமுகவுக்கு ஓட்டு போட்ட மக்களை இந்த அரசு ஏமாளியாக்கி, கோமாளியாக்கியுள்ளது என்றார்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தவில்லை. இந்த வரி உயர்வை இந்த பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, விவசாய தொழிலாளர்கள் தாங்கி கொள்ள முடியாது. சொத்து வரி, வீட்டு வரியை கட்டமுடியாமல் பலர் வீட்டை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றார்.
எனவே, தற்போது உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இந்த பகுதி மக்கள் அதிக அளவில் பணியாற்றி வரும் பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வரி உயர்வை இந்த மக்கள் எப்படி தாங்கி கொள்ள முடியும். நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில் திமுக சொத்து வரியை உயர்த்தியுள்ளது. இப்படியே அடுத்தடுத்து அனைத்து பொருட்களின் விலையும் உயரும்.
இப்படியே எல்லா பொருட்களின் விலைகளையும் உயர்த்திக் கொண்டே போனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்கு விலை உயர்ந்து விடும். திமுகவினர் வாழ்வதற்காக மக்களை பலிகடா ஆக்கிவிட்டனர். மக்கள் எப்போதும் போல மகிழ்ச்சியாக வாழ, அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும். இந்தக் கட்சியை அழிக்க எந்தக்கொம்பனாலும் முடியாது என்று பேசினார்.
newstm.in

