நான் இருக்கும் வரை யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது.. தஞ்சையில் சசிகலா சூளுரை..!
நான் இருக்கும் வரை யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது.. தஞ்சையில் சசிகலா சூளுரை..!

தஞ்சையில் உள்ள தனியார் மண்டபத்தில், அண்ணா திராவிடர் கழகத்தை சேர்ந்த சுமார் 2,000 பேர் அதன் தலைவர் திவாகரன் தலைமையில், வி.கே.சசிகலாவுடன் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா பேசுகையில், “அனைவரையும் ஒன்றிணைத்து கழகத்தை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதுதான் என் எஞ்சிய வாழ்க்கையின் லட்சியமாக கருதுகிறேன்.

பெங்களூருவில் இருந்து வந்த நாள் முதல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை தான் தற்போது வரை வலியுறுத்தி வருகிறேன்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போல் ஒரு கண்ணியமும், புரட்சித்தலைவி ஜெயலலிதா போல் ஒரு கடமையும் இருக்கும் என்று எண்ணி இந்த இயக்கத்தை மக்கள் ஆதரித்தார்கள்.
தற்போது நடந்த நிகழ்வு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இரு பெரும் தலைவர்களும் இதனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக, அவர்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவதா..?

சில சுயநலவாதிகள், தாங்கள் இருக்கும் இயக்கம் எப்பேர்ப்பட்ட இயக்கம், எப்படிப்பட்ட தலைவர்கள் கொண்ட இயக்கம், நம் தலைவர்கள் பட்ட கஷ்டம் என்ன..? அவர்கள் செய்த தியாகங்கள் என்ன..? எத்தனை கழக தொண்டர்கள் தங்கள் இன்னுயிர்களை தந்துள்ளார்கள் என்று சிந்திக்காமல், தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, நான் பெரியவன்.. நீ பெரியவன் என்று போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்..?.
இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி தொண்டர்கள் என்று எண்ணும் போது என் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அம்மாவின் மறைவிற்கு பிறகு 2016 டிசம்பர் மாதம் வரை நடந்த பொதுக்குழுக்கள் தான் உண்மையான பொதுக்குழு. அந்தப் பொதுக்குழுவிற்கு தான் கழக சட்ட திட்ட விதிகளின்படி முறையாக அழைப்பு கொடுத்து ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆசிர்வாதத்தோடு சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு நடைபெற்றதாக சொல்லப்படும் பொதுக்குழு அனைத்தும் நிர்வாகிகள் கூட்டமாக தான் தோன்றுகிறது.
அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒரு முறை கழக சட்ட திட்டங்களை, விதிகளை யாரும் மாற்றியது இல்லை. ஆனால், தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது. அவர்கள் செய்கிற காரியங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லாது. இதற்கெல்லாம் விரைவில் ஒரு தீர்வு ஏற்படும்.
நான் இருக்கும் வரை யாராலும் இந்த இயக்கத்தை அபகரித்து விடவோ, அழித்துவிட முடியாது. விரைவில் எல்லாவற்றையும் சரி செய்து அனைவரையும் ஒருங்கிணைந்து மீண்டும் நமது இயக்கம் எந்தவித ஜாதி மத பேதமின்றி, வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இன்றி அதே மிடுக்கோடும் புது பொலிவோடும் விளங்கும் என்று உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

