ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்..!!
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன. அந்த மர்மம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை தொடங்கியது. இடையில் சில நாட்களாக விசாரணை நடைபெறவில்லை.
இந்தநிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பேரில் தற்போது மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது.சசிகலா தரப்பினர் கேட்டுக்கொண்டதன் பேரில் அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
இந்தநிலையில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா உறவினர் இளவரசி ஆகியோருக்கு ஆறுமுகசாமி ஆணையம் அழைப்பாணை அளித்து இருந்தது.
அதை ஏற்று ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணைய அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் ஆணைய விசாரணை முன்பு நேரில் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஓபிஎஸ் அளித்த வாக்குமூலத்தில், “மெட்ரோ ரயில் நிலைய நிகழ்ச்சிக்குப் பின்னர் ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை. ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது நான் சொந்த ஊரில் இருந்தேன். உதவியாளர் மூலமாக தான் இந்த தகவலை அறிந்தேன்.
மருத்துவமனையில் அவருக்கு எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள், என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. விஜயபாஸ்கர் மூலமாகவே அவரது சிகிச்சை விவரங்கள் குறித்து தெரிந்துகொண்டேன். ஜெயலலிதாவுக்கு இதய பாதிப்பு ஏற்பட்ட போது என்ன சிகிச்சை கொடுத்தனர் என்பது எனக்கு தெரியாது” என்று கூறியுள்ளார்.

