ஒரே பால் 3 விக்கெட்கள்... அதிமுக சார்பில் வென்ற தந்தை, தாய், மகன் திமுகவில் இணைந்தனர்
ஒரே பால் 3 விக்கெட்கள்... அதிமுக சார்பில் வென்ற தந்தை, தாய், மகன் திமுகவில் இணைந்தனர்

பேரூராட்சியில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற தந்தை, தாய், மகன் ஆகியோர் குடும்பத்தோடு திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் திமுக 8 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக 3, பாஜக 2, சுயேச்சைகள் 2, காங்கிரஸ், மதிமுக, அமமுக ஆகியவை தலா ஒரு இடங்களில் வென்றன. இதில் ஒரு சிறப்பு உள்ளது.
அதாவது, அதிமுக சார்பில் 2ஆவது வார்டில் சண்முகசுந்தரம், 8ஆவது வார்டில் அவரது மனைவி அருணாச்சல வடிவு, 12ஆவது வார்டில் இவர்களின் மகன் பிரேம்குமார் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றனர். அதாவது ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகன் ஆகியோர் அதிமுகவில் வென்றனர்.

இந்த நிலையில், இவர்கள் மூவரும் அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். வெற்றிபெற்ற மூவரும் நேற்று குடும்பத்தோடு, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை சந்தித்து திமுகவில் இணைந்தனர். அதிமுக சார்பில் வெற்றிபெற்ற மூவரும் கூண்டோடு திமுகவுக்கு மாறியதால், இப்பேரூராட்சியில் அதிமுகவுக்கு உறுப்பினர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், திமுகவின் பலம் 11 ஆக உயர்ந்துள்ளது.
இதுபோன்று மேலும் பல இடங்களில் வெற்றிபெற்ற அதிமுக உறுப்பினர்கள் திமுகவுக்கு தாவி வருவதால் அக்கட்சியின் தலைமை விரக்தியில் உள்ளது.
newstm.in

