நடு வானில் பயணிக்கு மயக்கம்.. மருத்துவராக மாறிய கவர்னர்..!
நடு வானில் பயணிக்கு மயக்கம்.. மருத்துவராக மாறிய கவர்னர்..!

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வாரணாசி சென்றிருந்தார். நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு, டெல்லியில் இருந்து ஹைதராபாத் வழியாக சென்னை புறப்பட்ட விமானத்தில் அவர் ஹைதராபாத்துக்கு சென்றார்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் உடல் முழுவதும் வியர்த்து, கண்கள் சொருகிய நிலையில் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இதை கவனித்த விமான பணிப்பெண், ‘விமானத்தில் டாக்டர் யாராவது இருக்கிறீர்களா..?; பயணி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று அறிவித்துள்ளார்.
அதைக் கேட்ட டாக்டர் தமிழிசை, முன் பகுதியில் இருந்து எழுந்து பின் பகுதிக்குச் சென்றார். அங்கு, தனியாக அமர்ந்திருந்த அந்த பயணியை பரிசோதித்து முதலுதவி சிகிச்சை அளித்து சில மருந்துகளையும் கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த பயணி கண் விழித்து, இப்போது பரவாயில்லை என்று கூறியுள்ளார். அவருக்கு தைரியம் சொன்ன தமிழிசை, அவர் அருகிலேயே அமர்ந்து ஹைதராபாத் வரை பயணம் செய்துள்ளார்.
விமானம் தரையிறங்கியதும், விமான நிலைய மருத்துவ குழுவினரிடம் அந்த பயணியை ஒப்படைத்துவிட்டு கவர்னர் மாளிகை புறப்பட்டுச் சென்றார்.
உடல்நிலை பாதித்த அந்த பயணி ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி என்பது தெரிய வந்தது. தக்க நேரத்தில் கவனித்து உஷார்படுத்திய விமான பணிப்பெண்ணை டாக்டர் தமிழிசை பாராட்டினார்.

அதே விமானத்தில் பயணித்த ராணுவ அதிகாரி ஒருவர் அதை செல்போனில் படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இது குறித்து டாக்டர் தமிழிசை கூறும்போது, “தக்க நேரத்தில் அந்த பணிப்பெண் கவனித்துள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து போயிருந்தது. தலையும் குழைந்து விழும் நிலையில் இருந்தார். கவனிக்காமல் இருந்திருந்தால் மயக்க நிலையை அடைந்திருப்பார்” என்றார்.

