பொதுமக்களே உஷார்.. சைக்கிளும் வரல.. பணமும் அம்பேல்..!
பொதுமக்களே உஷார்.. சைக்கிளும் வரல.. பணமும் அம்பேல்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பி.எம்.சாமி காலனியைச் சேர்ந்த சங்கேஷ் என்பவரின் மனைவி லெதிகா (39). இவர், தன் மகனுக்கு சைக்கிள் வாங்குவதற்காக இணையதளத்தில் தேடி, குறிப்பிட்ட ஒரு சைக்கிளை தேர்வு செய்தார்.
அந்த சைக்கிளுக்கு 1699 ரூபாய் முன்பணம் கட்டுமாறு இணையதளத்தில் தெரிவித்திருந்தனர். அதன்படி, 1699 ரூபாயை செலுத்தினார். ஆனால், குறிப்பிட்ட நாட்கள் கடந்தும் சைக்கிள் வந்து சேரவில்லை.
இதையடுத்து, இணையதளத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணில் அழைத்துப் பேசினர். மறுமுனையில் பேசிய வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, செலுத்திய முன்பணத்தை திருப்பி அனுப்புவதாகக் கூறி, லெதிகாவின் 'கூகுள் பே' அல்லது 'போன் பே' எண் தருமாறு கேட்டு வாங்கியுள்ளார்.
அத்துடன், தான் அனுப்பும் மெசேஜில் இருக்கும் 'லிங்க்'கை கிளிக் செய்ய வேண்டும் என்றும், அதில் வரும் கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளிக்க வேண்டும் என்றும், ஓ.டி.பி. எண் வந்தால் அதை உள்ளீடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி லெதிகா செய்தபோது, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த 93,169 ரூபாய், வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி என்ற பெயரில் போனில் பேசிய நபரால் எடுக்கப்பட்டு விட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த லெதிகா, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

