கவனமா இருங்க மக்களே.. 3 மாதங்களுக்கு பிறகு முதல் பலி.. அமைச்சர் எச்சரிக்கை..!
கவனமா இருங்க மக்களே.. 3 மாதங்களுக்கு பிறகு முதல் பலி.. அமைச்சர் எச்சரிக்கை..!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்று (15-ம் தேதி) 476 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில், சென்னையில் மட்டும் 221 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. ஆனால், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
“உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில்தான் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைவாக பரவுகிறது.
எனினும், முதல்வரின் அறிவுறுத்தலின் படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்.
கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு ஏதும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், நேற்று தஞ்சை சேர்ந்த 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார். எனவே, பொதுமக்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, கொரோனா 2-வது தவணை தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும்.
காய்ச்சல்,சளி உள்ளிட்ட அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

