மக்களே உசார்.. பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சி..!
மக்களே உசார்.. பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சி..!

சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள ‘யா மொஹைதீன்’ பிரியாணி கடையில் கெட்டுப்போன சிக்கன் பரிமாறப்பட்டதாக வந்த புகாரையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ் உட்பட அதிகாரிகள் அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, காலாவதியான சிக்கன், மீன், இறால் உள்ளிட்ட இறைச்சிகள் 60 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனைக்குப் பின் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கெட்டுப்போன சிக்கன் பரிமாறப்பட்டதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு வாட்ஸ் அப் மூலம் வந்த புகாரையடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சமையல் அறையில் செயல்படாத குளிரூட்டிகளில் இருந்து 60 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இறைச்சிகள் வாங்கியதற்கு சரியான ரசீது இல்லை. இந்த நிறுவனத்தின் பெயரில் அமைந்துள்ள மற்ற கடைகளிலும் சோதனை செய்ய உள்ளோம்.
இந்த கடைக்கு முதற்கட்டமாக 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 15 நாட்கள் உணவகம் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சோதனை நடைபெறும். அப்போது, கடையின் தன்மையை பொறுத்து உணவகம் மீண்டும் இயங்க தடையில்லா சான்று வழங்கப்படும்.
தடையில்லா சான்று கொடுத்த பின்பு உணவகங்கள் மீண்டும் அதே தவறை செய்தால் உணவகத்திற்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும். எங்கள் சோதனை உணவகங்களில் தொடர்ச்சியாக நடைபெறும்” என்று தெரிவித்தார்.

