உதவி செய்த வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கிய மக்கள்!!
உதவி செய்த வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கிய மக்கள்!!

கோவையில் குழந்தைக்கு உதவி செய்த வட மாநில இளைஞரை பொதுமக்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் கோவையில் பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் சிங்காநல்லூர் பகுதியில் பஞ்சு மிட்டாய் விற்றுக் கொண்டிருந்த போது, 4 வயது சிறுமியொருவர், அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது சாலையை கடக்க சிறுமி அஞ்சியதை அடுத்து, யோகேஷ் சிறுமியின் கையைப் பிடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இளைஞர் சிறுமியை கடத்தி செல்வதாக நினைத்து அவர் மீது தாக்குதல் நடத்தி போலீசில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் யோகேஷிடம் விசாரணை நடத்தினர். அதில் யோகேஷ் அடிக்கடி அப்பகுதிக்கு சென்றுள்ளதால் சிறுமியின் வீட்டை ஞாபகமாக வைத்து வீட்டுக்கு சென்று விட்டது தெரியவந்தது. இதனையடுத்து யோகேஷை போலீசார் விடுவித்தனர்.
பின்னர் யோகேஷ் பந்தய சாலையில் பஞ்சு மிட்டாய் விற்றுக் கொண்டிருந்த போது, அச்சிறுமி தனது தாயுடன் அங்கு வந்துள்ளார். அப்போது யோகேஷை பார்த்த சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்து, இதுதொடர்பாக அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் யோகேஷ் குழந்தையை கடத்த திட்டமிட்டு வந்ததாக கூறி சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். குழந்தையை கடத்த முயற்சிக்கவில்லை என யோகேஷ் ஹிந்தியில் கூறியுள்ளார்.
இதுகுறித்துக் தகவலறிந்த பந்தய சாலை போலீசார் யோகேஷை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் தவறான புரிதலால் வடமாநில இளைஞரான யோகேஷ் இரண்டாவது முறையாக தாக்கபட்டது தெரியவந்தது. சிறுமியின் தரப்பில் புகார் ஏதும் அளிக்கபடாத நிலையில் யோகேஷை போலீசார் சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்.
newstm.in

